நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு சேவைகள்

சேவைகள்

மேலதிக விபரங்களுக்கு தலைப்பின் மேல் சுடக்கவும்

இந்து ஆலயத்தின் பதிவு

நாட்டின் எப்பாகத்தையும் சேர்ந்த இந்து ஆலயங்கள் திணைக்களத்திற் பதிவு செய்யப்படுகின்றன. இவை இந்து மக்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட வேண்டியவை என்பது முக்கியமானதாகும்.

இந்து ஆலயமொன்றை திணைக்களத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டுமாயின், ஆலயப்பதிவு விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து,

 • ஆலய வரலாறு பற்றிய சுருக்கம்
 • பரிபாலன சபை விபரம்
 • சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஆலய பரிபாலன யாப்பு
 • ஆலயக் காணியினை உறுதிப்படுத்தும் ஆவணம்
 • நிர்வாகம்இ நிதி தொடர்பான வருடாந்த அறிக்கைகள்
 • ஆலயமூர்த்திகள்இ விசேட பூசைகள், வருடாந்த உற்சவம் பற்றிய விபரங்கள்
 • ஆலயத்தின மூலம் செய்யப்படும் பொதுச் சேவைகள் பற்றிய விபரம்
 • வங்கிக் கணக்கிலக்கம் (இருப்பின்)

ஆகியவை தனித்தனி ஆவணங்களாகத் தயாரிக்கப்பட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள இங்கே சுடக்கவும்.

 

இந்து சமய நிறுவனங்களின் பதிவு

இந்துசமய, கலாசார வளர்ச்சி கருதி அமைக்கப்படுகின்ற இந்துசமய நிறுவனங்கள் திணைக்களத்திற் பதிவு செய்யப்படுகின்றன. இதன் உறுப்பினர்கள் அனைவரும் இந்துக்களாகவே இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

இந்துசமய நிறுவனமொன்றைப் பதிவு செய்வதாயின் திணைக்களத்தில் விநியோகிக்கப்படும் படிவத்தைப் பூர்த்தி செய்து, கீழ்வரும் ஆவணங்களை இணைத்துச் சமர்ப்பித்தல் வேண்டும்.

 • மன்ற அங்குரார்ப்பணக் கூட்டடத்தின் அறிக்கைப் பிரதி
 • தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபையினரின் பெயர் விபரம்
 • அங்கீகரிக்கப்பட்ட யாப்பு
 • செயல்திட்ட அறிக்கை
 • கணக்கறிக்கை
 • அறநெறிப் பாடசாலை நடத்துவதாயின் விபரம்
 • வங்கிக்கணக்கிலக்கம் (இருப்பின்)

 

விண்ணப்பப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள இங்கே சுடக்கவும்.

அறநெறிப் பாடசாலையை பதிவு செய்தல்

ஒரு அறநெறிப் பாடசாலையானது எமது திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆலயம் அல்லது நிறுவனத்தின் கீழ் இயக்கப்படல் வேண்டும். அவற்றைப் பதிவு செய்வதாயின் தொடர்ந்து மூன்று மாத காலங்கள் சிறப்பாக இயங்கியிருத்தல் வேண்டும்.

பதிவு விண்ணப் படிவம் திணைக்களத்தில் பெற்று புரணமாக நிரப்ப்ப்பட்டு சமர்ப்பிக்கப்படும் போது இரண்டு நாட்களில் பதிவு செய்து கொடுக்கப்படும்.

விண்ணப்பப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள இங்கே சுடக்கவும்.

ஆலயங்களின் புனரமைப்புக்கான நிதியுதவி

புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் இந்து ஆலயங்களின் கோரிக்கைகளுக்கமையத் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டிற்கேற்றவாறு ஒரு சிறு தொகை புனரமைப்பு நிதியுதவியாக வழங்கப்படும். நிதியுதவி கோரும் ஆலயம் திணைக்களத்திற் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

திணைக்களத்தால் விநியோகிக்கப்படும் நிதியுதவி கோரும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பூரணப்படுத்துவதுடன் பின்வரும் ஆவணங்களும் கட்டாயமாக இணைக்கப்படல் வேண்டும்.

 • ஆலயத்தின் பதிவுச்சான்றிதழ்.
 • ஆலயக் கடிதத் தலைப்பில் தலைவர் / செயலாளர் ஒப்பங்களுடன் நிர்வாகக்குழு விபரம்.
 • புனரமைப்பு விபரத்தைத் தெரிவிக்கும் நிதியுதவிக் கோரிக்கைக் கடிதம்.
 • செலவினங்களைக் காட்டும் உத்தேச மதிப்பீடு (தொழில்நுட்ப உத்தியோகத்தர் அல்லது சிற்பியின் மதிப்பீட்டுக் கடிதம்).
 • புனரமைப்பு வரைபடம்
 • வங்கிக்கணக்கிலக்கம் - பிரதான பக்கத்தின் நிழற்பிரதி.
மிக முக்கியம்:

விண்ணப்பப்படிவத்தில் குறித்த பிரதேச கிராமசேவை உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரின் சான்றுப்படுத்தல் கட்டாயமானதாகும்.

இந்துச் சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கான நிதியுதவி

திணைக்களத்தில் பதிவு செய்து கொண்டுள்ள இந்துச் சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்கள் தொடர்பான தரவுகள் திணைக்களத்தின் மூலம் வருடாந்தம் கோரப்படுகின்றன. இத்தரவுகளின் அடிப்படையில் இவ் இல்லங்களின் குறித்த ஒரு பணியை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு தொகை நிதியுதவியாக வழங்கப்படுகின்றது.

தளபாட கொள்வனவிற்கான நிதியுதவி

தளபாட கொள்வனவிற்காக ரூபா 30,000.00 வழங்கல். சிறப்பாக இயங்கும் அறநெறிப் பாடசாலைகள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் ரூபா 30,000.00 ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள அறநெறிப் பாடசாலைகளுக்கு வழங்கப்படும்.

இந்துசமய நிறுவனங்களுக்கான நிதியுதவி

திணைக்களத்தில் பதிவு செய்து கொண்டுள்ள, தமக்கென சொந்த கட்டிடங்களைக் கொண்டுள்ள இந்துசமய நிறுவனங்களின் புனரமைப்புத் தேவைகளுக்காக ஒரு சிறு தொகை நிதியுதவியாக வழங்கப்படும்.

இந்துசமய நிறுவனங்கள் மேற்கொள்கின்ற இந்துசமய மேம்பாடு தொடர்பான செயற்பாடுகளுக்காக சிறிய அளவிலான நிதியுதவி திணைக்களத்தின் மூலம் வழங்கப்படுகின்றது.

அறநெறி ஆசியர்களுக்கான விசேட கொடுப்பனவு

அறநெறி ஆசியர்களுக்கான விசேட கொடுப்பனவு ரூபா 2,000.00 ஒவ்வொரு ஆசிரியருக்கும் வருடத்திற்கு ஒருமுறை அறநெறிப் பாடசாலை நால் கொள்வனவிற்காக இக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

வருடந்தோறும் பின்வரும் பரீட்சைகள் திணைக்களத்தால் நடாத்தப்படுகின்றது.

அறநெறி ஆசிரியர்களுக்கான பரீட்சை

ஆசிரியர்களின் அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் வருடந்தோறும் அறநெறி ஆசிரியாகளுக்கு தமிழ், சமயம் ஆகிய பாடங்களில் பரீடசைகள் நடாத்தப்பட்டு பரீடசை எழுதியவர்களுக்கு நால் கொள்வனவிற்கான பணம் வழங்கப்படுகிறது.

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான பொது அறிவப்போட்டிப் பரீட்சை

அறநெறி மாணவர்களின் சமய அறிவை அளவிடும் நோக்குடன் வருடந்தோறும் அறநெறி மாணவர்களுக்கிடையே இந்து சமயப் பொது அறிவுப்போட்டி திணைக்களத்தால் நடாத்தப்படுகிறது. இப் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கும் தேசிய, மாவட்ட மட்டங்களில் பரிசில்கள் வழங்கப்படுவதுடன் 40 புள்ளிகளுக்கு மேற் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

இந்து தர்மாச்சாரியார் பரீட்சை

இப் பரீட்சைக்கு விண்ணப்பதாரிகள் அறநெறிப் பாடசாலைகள் மூலமே விண்ணப்பிக்க முடியும். இப் பரீட்சையில் க.பொ.த. உயர்தரத்தில் இந்து நாகரிகம் கற்றவர்களும், இந்து இறுதிநிலைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களும்,சைவப் புலவர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களும் அதற்குமேல் தகமையுடையவர்களும் தோற்றலாம்.

 • இது 5 வினாத்தாள்களை கொண்டது,
 • சமய வரலாறு
 • வேதங்களும் ஆகமங்களும்
 • சமயஞானிகளும் பெரியார்களும்
 • 12 திருமுறைகள்
 • கோயில்களும் கலைகளும்

இந்து இறுதிநிலைப் பரீட்சை

இப் பரீட்சைக்கு விண்ணப்பதாரிகள் அறநெறிப் பாடசாலைகள் மூலமே விண்ணப்பிக்க முடியும். இப் பரீட்சையில் க.பொ.த. உயர்தரத்தில் இந்து நாகரிகம் கற்றவர்களும், அறநெறிப் பாடசாலை மேற் பிரிவு மாணவர்களும், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களும் தோற்றலாம்.

 • இது 4 வினாத்தாள்களை கொண்டது,
 • இந்து சமய வரலாறு
 • இந்து சமய மெய்யியல்
 • இந்து சமய இலக்கியம்
 • இந்து சமய வாழ்வியல்

நுழைவு விசாவிற்கான சிபார்சு

இலங்கையில் தற்காலிகமாகத் தங்கியிருந்து ஆலயத்தில் பணியாற்ற விரும்பும் சிவாச்சாரியார்கள் அல்லது திருப்பணி வேலைகளில் ஈடுபடும் இந்திய சிற்பிகளுக்கு இலங்கை வருவதற்கான நுழைவு விசா திணைக்களத்தின் மூலம் சிபார்சு செய்யப்படும்.

திணைக்களத்திற் பதிவு செய்யப்பட்டுள்ள ஆலயமொன்றின் பரிபாலன சபையினர், வரவழைக்க விரும்பும் நபர்களின் பெயர், கடவுச்சீட்டு இலக்கம், எத்தகைய தேவைக்கு என்பவற்றைக் குறிப்பிட்டு,

 • பணிப்பாளர், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
 • செயலாளர், புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு
 • கட்டுப்பாட்டாளர், குடிவரவு குடியகல்வு திணைக்களம்

ஆகியோருக்கு தனித்தனியே ஆங்கிலத்தில் கடிதங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும். ஒவ்வொரு கடிதத்துடனும், குறித்த நபர்களின் கடவுச் சீட்டின் பிரதான பக்கங்களின் பிரதிகள் இணைக்கப்படல் வேண்டும். குறித்த தேவைக்கான சான்றுப்படுத்தல் அப்பிரதேச கிராமசேவையாளர், பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர், ஆகியோரினால் வழங்கப்படல் வேண்டும்.

வதிவிட விசாவிற்கான சிபார்சு

திணைக்களத்தின் சிபார்சுடன் நுழைவு விசா அனுமதி பெற்று இலங்கை வந்துள்ள அல்லது முன்பே வதிவிட விசா அனுமதி பெற்றுள்ள இந்தியப் பிரஜைகளான சிற்பிகள் மற்றும் சிவாச்சாரியார்களுக்கு தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருப்பதற்கான வதிவிட விசாவிற்குரிய சிபார்சு திணைக்களத்தால் வழங்கப்படும்.

ஆலய பரிபாலன சபையினர் வதிவிட விசா தேவைப்படும் நபர்களின் பெயர், கடவுச்சீட்டு இலக்கம் என்பவற்றைக் குறிப்பிட்டுத் தனித்தனியே ஆங்கிலத்தில் பின்வரும் மூவருக்கு கடிதங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

 • பணிப்பாளர், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
 • செயலாளர், புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு
 • கட்டுப்பாட்டாளர், குடிவரவு குடியகல்வு திணைக்களம்

குறித்த கடிதத்துடன் பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்படல் வேண்டும்.

 • பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்
 • நுழைவு விசா அல்லது முன்னைய வருடம் வதிவிட விசாவிற்குத் திணைக்களம் வழங்கிய சிபார்சுக் கடிதம்
 • குறித்த இந்தியப் பிரஜையின் கடவுச் சீட்டின் பிரதான பக்கங்கள், கடைசியாகப் பெற்ற விசா பக்கம்

குறித்த பிரஜை தமது பிரதேசத்தில் கடமை புரிவதை உறுதிப்படுத்தும் கிராமசேவையாளர், பிரதேச செயலாளர் / மாவட்ட செயலாளரின் சான்றுக்கடிதம்.

விண்ணப்பப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள இங்கே சுடக்கவும்.

சுங்க வரி விலக்கு

திணைக்களத்திற் பதிவு செய்யப்பட்டுள்ள ஆலயம் ஒன்றிற்கு பிரதிஷ்டை செய்வதற்கான சிலைகள், புஜைக்கான உபகரணங்கள், வாசனைத் திரவியங்கள் போன்றன வெளிநாடுகளிலிருந்து நன்கொடையாக வழங்கப்படுமிடத்து இப்பொருட்களிற்கான சுங்க வரி விலக்குப் பெறுவதற்குரிய சிபார்சினை வழங்கும்.

ஆலய பரிபாலன சபையினர் இறக்குமதி செய்யப்படும் பொருட்களைக் குறிப்பிட்டு சான்றுப்படுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதங்களை பின்வரும் மூவருக்கு தனித்தனியே முகவரியிட்டு சமர்ப்பித்தல் வேண்டும்.

 • பணிப்பாளர், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
 • செயலாளர், புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு
 • கட்டுப்பாட்டாளர், குடிவரவு குடியகல்வு திணைக்களம்

குறித்த கடிதத்துடன் பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்படல் வேண்டும்.

 • புரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்.
 • நன்கொடை என்பதை உறுதிப்படுத்தும் சான்றுக் கடிதம்.
 • குறித்த பொருட்களைக் கொள்வனவு செய்துள்ள நிறுவனத்தின் பற்றுச் சீட்டு, ஆலயத்தின் பெயரில் பெறப்பட்ட விலைப் பட்டியல்.
 • பொதி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் ஆவணங்கள்.

மேற்குறித்த அனைத்து ஆவணங்களினதும் 03 பிரதிகள் வழங்கப்படல் வேண்டும்.

விண்ணப்பப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள இங்கே சுடக்கவும்.

பூக்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி

ஆலயங்களின் விசேட உற்சவங்களை முன்னிட்டுப் பூக்களை இறக்குமதி செய்வதற்குரிய சிபார்சினை அமைச்சின் செயலாளர் ஊடாக வித்துக்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளருக்கு இத்திணைக்களம் வழங்கும்.

பதிவு செய்யப்பட்ட ஆலயங்களின் தலைவர் / செயலாளர் தமது கடிதத் தலைப்பில் எத்தகைய தேவை, பூக்களின் வகை, நிறை என்பவற்றைக் குறித்துக் கோரிக்கைகளை ஆங்கிலத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.

அடையாள அட்டை

இந்துக் குருமார் மற்றும் துறவியர் அடையாள அட்டை இந்துத் துறவியர் மற்றும் ஆலயங்களிற் பணிபுரியும் இந்துக் குருமாருக்கென விசேட அடையாள அட்டைகளை திணைக்களம் விநியோகிக்கின்றது. இவ் அடையாள அட்டையைப் பெறவிரும்பும் குருமார் திணைக்களத்தின் விண்ணப்பப் படிவத்தைப் புரணப்படுத்தி, உரிய அளவிலான இரண்டு புகைப்படங்களுடன் கிராம சேவை உத்தியோகத்தர், பிரதேச செயலாளர், ஆலய பரிபாலன சபைத் தலைவர் ஆகியோரின் உறுதிப்படுத்தலுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.

 

இந்துக் குருமாருக்கான அ. அ. விண்ணப்பப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள இங்கே சுடக்கவும்.

இந்துக் துறவியருக்கான அ. அ. விண்ணப்பப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள இங்கே சுடக்கவும்.

ஐயப்ப யாத்திரிகர்களுக்கான விசேட அடையாள அட்டை

வருடம் தோறும் மாலை அணிந்து சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப அடியார்களுக்கு எமது திணைக்களத்தால் விசேட அடையாள அட்டை வழங்கப்படுகின்றது. இதற்கான விணண்ப்பப்படிவம் எமது திணைக்களத்தால் விநியோக்கிக்கப்படுகின்றது என்பதுடன் அதனைப் பெற்று உரியமுறையில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் அடியார்களுக்கு அதே தினத்தில் அல்லது மறுநாள் இவ்வடையாள அட்டை வழங்கப்படுகின்றது.

இவ்வடையாள அட்டையை வைத்திருக்கும் யாத்திரிகர்களுக்கு உதவும் பொருட்டு இந்தியர் உயர் ஸ்தானிகர் ஆலயத்தில் விசேடய கரும பீடம் ஒன்று அக்காலப்பகுதியில் திறக்கப்பட்டிருக்கும் என்பதுடன், ஸ்ரீலங்கன் எயார் லையின்ஸ் விமான சேவையினர் சலுகை விலையில் விமானச்சீட்டுக்களையும் வழங்குகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்துக்கட்டடக் கலை, சிற்பக்கலை தொடர்பான பயிலரங்கு

இந்துக்கோயில்களின் பாகங்கள், அமைப்புமுறைகள், அவற்றின் பல்வேறுவகைப்பட்ட பாணிகள், அவை காணப்படும் பிரதேசங்கள், அவற்றின் தனித்தன்மை சிற்பங்களின் வடிவமைதி, அவை உணர்த்தி நிற்கும் முத்திரைகள், அவற்றின் காலத்தை அறிந்து கொள்ளும் திறன் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ளும் முகமாக அத்துறையிலே சிறப்பு மிக்க பேராசிரியர்களைக் கொண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்காக நடத்தப்படும் பயிலரங்கு ஆகும்.

இப்பயிலரங்கில் இந்துநாகரிகம், நுண்கலை, வரலாறு, தொல்லியல் பாடங்களைக் கற்கும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொள்ளமுடியும், 2010 ஆம் ஆண்டு முதல் இது செயற்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணம், தென்கிழக்கு கிழக்குப் பல்கலைக் கழகங்களைச் சார்ந்த 60 இற்கு மேற்பட்ட பட்டதாரி மாணவர்கள் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் விரிவுரை மண்டபத்தில் நடைபெற்ற பயிலரங்கில் கலந்து கொண்டனர்.

இப்பாடநெறி திராவிட, வேசர, நாகர பாணிகளுக்குரிய கோவில்கள், அவற்றின் தனித்தன்மை, அவற்றை கால அடிப்படையில் பகுத்து பல்லவர், சோழர், விஜயநகர, நாயக்க, ஹொய்சாளர், சாளுக்கிய, ஒரிசாக்கோயில்கள் அவற்றின் பாகங்கள் பௌத்த, இந்து சிற்பங்கள் தொடர்பானவையாகும்.

ஆய்வரங்குகள்

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆயடவுப்பிரிவினால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் இந்து சமய ஆய்வரங்குகள் இந்து சமயம் தமிழிலக்கியம் பண்பாடு தொடர்பான பல்வேறு விடயங்களை பலவகைப்பட்ட பாரமாண நோக்கில் ஆராயும் வகையில் அமைந்துள்ளன. இவ்வாய்வரங்கில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் மிகவும் ஆழமாகவும் செறிவாகவும் ஆய்வு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படுபவையாகும். இவ்வாய்வரங்குகள் பேராசிரியார் சி. பத்மநாதன் அவர்கள் நெறிப்படுத்தலின் கீழ் நடாத்தப்படுகின்றன.

இவ்வாய்வரங்குகளானது தமிழக, இலங்கை அறிஞர்களின் ஒன்று கூடலாகவும் பரந்துபட்ட ஆய்வுகளுக்குக் களம் அமைப்பனவாகவும் அமைந்துவருகின்றன. பல்கலைக்கழக மாணவர்ள், இலக்கிய ஆர்வலர்கள் பேரார்வத்தோடு கலந்து கொள்கின்றமை இவற்றின் வெற்றிக்கு சான்றாக அமைகின்றது.

ஆண்டு நூல்
2010 விஜயநகரப்பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்.
2009 சோழப்பேரரசும் சமயப் பெருநெறிகளும்.
2008 பக்திநெறியும் பண்பாட்டுக் கோலங்களும்.
2007 சங்க இலக்கியமும் சமூகமும்.
2003 சிலப்பதிகாரத்தில் பண்பாட்டுக் கோலங்கள்.
2002 இந்து கலாசாரம் - நடனங்களும் ஓவியங்களும்.
2001 இந்து கலாசாரம் - கோயில்களும் சிற்பங்களும்.
1998 தமிழகத்திலும் இலங்கையிலும் 13ஆம் நூற்றாண்டு வரை ஏற்பட்ட இந்துசமய வளர்ச்சி.
1997 தமிழ் அரங்கியல் மரபுகளும் மாற்றங்களும்.
1995 தமிழ் நாட்டார் வழக்காற்றியல்.
1993 தொடர்பாடல், மொழி, நவீனத்துவம்.

சாசனவியல் பயிற்சி நெறி

தமிழ் மொழியில் பல்வேறு கூறுகளின் வளர்ச்சிகளை அறிந்து கொள்ளவும் இவற்றிலே சமய பண்பாடுகளை அறிந்து கொள்வதற்கும் இந்து மக்களின் தொன்மையைப் பறைசாற்றுதற்கும் கல்வெட்டுக்களை வாசித்தறியும் திறனை வளர்க்கு முகமாக சாசனவியல் பயிலரங்கு திணைக்களத்தால் ஒழுங்குசெய்யப்பட்டது. இப்பயிற்சி நெறி ஆரம்ப பயிற்சி, உயர்தரப் பயிற்சி என்ற வகையில் அமையும். 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சி நெறி 2009, 2010 ஆகிய இரண்டு வருடங்களில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் வரலாறு, தமிழ்மொழி, இந்துநாகரிகம் ஆகிய பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களின் பங்கேற்றலுடன் ஆரம்பப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இப்பாடநெறியில் பாடத்திட்டங்களாக பிராமி சாசனங்கள், வட்டெழுத்து சாசனங்கள், அசோக சாசனங்கள் இலங்கை சாசனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக்கற்கை நெறியில் விரிவுரையாளர்களாக இத்துறையில் விசேட புலமை மிக்க பேராசிரியர் சி. பத்மநாதன் கலாநிதி வெ. வேதாசலம் கலாநிதி சு. இராஜகோபால் ஆகியோரினால் விரிவுரைகள் நடாத்தப்படுகின்றன. 2009, 2010 ஆகிய இரு ஆண்டுகளில் இப்பாடநெறியினை இதுவரை 110 மாணவர்கள் பெற்றுள்ளனர். இப்பயிற்சி நெறியின் பின்னர் பரிட்சைகள் நடாத்தப்பெற்று சித்தியடைந்த பரிட்சையாளர்களிற்குச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

கருத்தரங்குகள்

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்படும் தர்மாச்சாரியார் பரீட்சை, அறநெறி இறுதிநிலைப் பரீட்சை ஆகியவற்றிற்கு தோற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாவட்ட ரீதியாக இலங்கை முழுவதும் வருடந்தோறும் நடாத்தப்படுகின்றது.

பண்ணிசை

மாணவர்களின் பண்ணிசத் திறனை வளர்க்கும் நோக்குடன் எமது திணைக்கள அபிவிருத்தி உதவியாளர்கள் செயற்படும் மாவட்டங்களில் அறநெறிப் பாடசாலைகளில் பண்ணிசை வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன.

சைவசித்தாந்த வகுப்பு

இலங்கையின் இந்து சமய வளர்ச்சிக்காக எமது திணைக்களம் செயற்படுத்தும் பல்வேறு செயல்திட்டங்களில் ஒன்றாக வருடந்தோறும் சைவசிந்தாந்த நூல்கள் தொடர்பான அறிவினைப் பெற்றுக் கொள்ளும் முகமாக ஆர்வம் மிக்க இந்துப் பொது மக்களுக்காக பதினைந்து தினங்களுக்கு வகுப்பொன்றை நடாத்திவருகின்றது.

இந்தியா தர்மபுரம் ஆதீனத்தைச் சார்ந்த சைவசித்தாந்தப் பேராசிரியாராக விளங்கும் பேராசிரியர் எஸ். சண்முகவேல் அவர்களினால் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதியிலிருந்து யூன் மாதம் 6 ஆந் திகதி வரை 15 நாட்கள் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 29 ஆம் திகதி வரை 15 நாட்கள் "உண்மை விளக்கம்" என்னும் கருப்பொருளில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் விரிவுரைகள் நடைபெற்றன.

இந்துசமய சொற்பொழிவு

இளஞ்சைவ பரம்பரையினரின் சமய அறிவு, சமய பாரம்பரிய என்பவற்றை வளர்க்கும் நோக்கில் குருபூஜை தினங்களும், இந்துக்களின் விசேட தினங்களிலும், கோயில் விழாக்களிலும் சமய பெரியார்களினால் நடாத்தப்படுகின்றது.

தைப்பொங்கல்

பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள எமது திணைக்கள அபிவிருத்தி உதவியாளர்களுடாக இந்து சமய நிறுவனங்களுடன் இணைந்து தைப்பொங்கல் பண்டிகையானது மாவட்ட ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. தேசிய தைப்பொங்கல் விழாவானது ஆண்டு தோறும் குறித்த ஒரு மாவட்டத்தில் பெரியளவில் ஒழுங்கு செய்யப்பட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது.

தேசிய தினம்

இலங்கையின் தேசிய தினத்தினை குறிக்கும் முகமாக ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி - 4 ஆம் திகதியன்று காலை வேளையில் இந்து ஆலயம் ஒன்றில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.

மகாசிவராத்திரி

பிரதேசச் செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள எமது திணைக்கள அபிவிருத்தி உதவியாளர்களுடாக இந்து சமய நிறுவனங்களுடன் இணைந்து மகாசிவராத்திரி நிகழ்வானது மாவட்ட ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பதுடன் திணைக்களத்தால் ஒழுங்கு செய்யப்படும் மகாசிவராத்திரி நிகழ்வானது தேசிய மட்டத்தில் ஒரு மாவட்டத்தில் கொண்டாடப்படும்.

தமிழ் சிங்களப் புதுவருட நிகழ்வுகள்

தமிழ் சிங்களப் புதுவருட நிகழ்வுகள் எமது அமைச்சின் ஏற்பாட்டில் இவ் அமைச்சின் கீழ் இயங்கும் சகல திணைக்கள உத்தியோகத்தர்களும் பங்குபற்றும் நிகழ்வாக ஒவ்வொரு வருட ஏப்ரல் மாதத்தில் குறித்த ஒரு தினத்தில் கொண்டாடப்படுகின்றது. பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் பெரியோர் சிறியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பெற்று முதல் மூன்று இடங்களையும் பெற்றோருக்கு பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

நவராத்திரி

பிரதேசச் செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள எமது திணைக்கள அபிவிருத்தி உதவியாளர்களுடாக இந்து சமய நிறுவனங்களுடன் இணைந்து நவராத்திரி நிகழ்வுகள் மாவட்ட ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றன என்பதுடன் திணைக்களத்தால் ஒழுங்கு செய்யப்படும் நவராத்திரி நிகழ்வானது தேசிய மட்டத்தில் ஒரு மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. நடனம், பாடல் முதலான கலை கலாசார நிகழ்வுகள் இவ் விழாவில் மேடையேற்றப்படுகின்றன.

தீபாவளி

பிரதேசச் செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள எமது திணைக்கள அபிவிருத்தி உதவியாளர்களுடாக இந்து சமய நிறுவனங்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையானது மாவட்ட ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. தீபாவளி விழாவானது ஆண்டு தோறும் குறித்த ஒரு மாவட்டத்தில் பெரியளவில் ஒழுங்கு செய்யப்பட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது.

குருபூசை

பிரதேசச் செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள எமது திணைக்கள அபிவிருத்தி உதவியாளர்களுடாக இந்து சமய நிறுவனங்களுடன் இணைந்து இந்து சமய நாயன்டார்களின் குருபூஜை நிகழ்வுகள் மாவட்ட ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றன. தேசிய தைப்பொங்கல் விழாவானது ஆண்டு தோறும் குறித்த ஒரு மாவட்டத்தில் பெரியளவில் ஒழுங்கு செய்யப்பட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது.

கலாபூஷணம்

இலங்கையில் நுண்கலைத்துறையில் சேவையாற்றிய கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக திணைக்களம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து கலாபூஷணம் விருதினை வழங்கி வருகின்றது. 1996 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்ட இசை, நாட்டிய, நாடக, நாட்டுக்கூத்து இலக்கியம் போன்ற துறைசார் கலைஞர்கள் 40 பேர்கள் வருடாந்தம் இவ்விருதினைப் பெறுவர்.

கிடைத்தற்கரிய நூல்கள்

இந்துசமயத்தின் பயன்பாட்டுக்குரியதும் அருமையாகக் காணப்படுவதுமான நூல்கள் சேகரிக்கப்பட்டு அவை திணைக்களத்தினால் மறுபதிப்புச் செய்யப்படும். இத்திட்டம் 1981 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படுகின்றது.

ஆண்டு நூலின் பெயர் ஆசிரியர் பதிப்பாசிரியர்
2010 சிவவிக்கிரகவியல் பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ணஐயர்
2009 தண்டியலங்காரம்
திருக்கரசை புராணம்

திரு ஸ்ரீ பிரசாந்தன்
திரு க. இரகுபரன்
2008 மேன்மக்கள் சரித்திரம் பிரம்மஸ்ரீ
சு. இரத்தினசாமி ஐயர்
திரு க. சண்முகலிங்கம்
2007 இரகுவம்சம்
பிரம்மஸ்ரீ சி. கணேசையர் திரு ஸ்ரீ பிரசாந்தன்
2006 ஈழநாட்டுத்தமிழ்ப்புலவர் சரிதம் பிரம்மஸ்ரீ சி. கணேசையர் திரு க. இரகுபரன்
2005 நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
திரு க. இரகுபரன்
2003 சிவஞானபோத வசனலங்கார தீபம் ஸ்ரீகாசி செந்தில் நாதையர் பேராசிரியர். சோ. கிருஷ்ணராஜா
2002 பாரத அம்மானை
கலாநிதி சா. இ. கமலநாதன்
2001 திருவருட்பயன் திரு சு. சிவபாதசுந்தரம்
2000 வெருகல் ஸ்ரீசித்திர வேலாயுதர் காதல் ஞானசிரோன்மணி பண்டிதர் இ. வடிவேல்
1999 யாப்பெருங்கலக் காரிகை
திரு க. இரகுபரன்
1998 வரதபண்டிதம் திரு க. இரகுபரன்
1997 திருக்கோணாசல புராணம் திரு ஆ. சண்முக இரத்தினசர்மா
1996 ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு கதிரமலைப்பள்ளு நல்லூர் த. கைலாசபிள்ளை
முத்துக்குமாரசாமி ப. குமாரசாமி
1995 தட்சணகைலாச புராணம் 1
தட்சணகைலாச புராணம் 2
யாழ்ப்பாண வைபவ மாலை
பேராசிரியர் சி. பத்மநாதன்
பேராசிரியர் சி பத்மநாதன்
முதலியார் குல சபாநாதன்

1993 கோணேசர் கல்வெட்டு பண்டிதர் இ. வடிவேல்
1991 பசுவாமி விபுலானந்தா திரு க. கணபதிப்பிள்ளை
1987 மதங்கசூளாமணி சுவாமி விபுலானந்தர்
1981 பாடங்களும் மொழிபெயர்ப்பும்(ஆங்கலத்தில் மட்டும்) சேர். பொன்னம்பலம் அருணாச்சலம்
பண்பாடு

1991ஆம் ஆண்டு முதன் முதலில் ஆய்வு இதழாக வெளியிடப்பட்டது. முன்னாள் திணைக்களப்பணிப்பாளர் திரு.க. சண்முகலிங்கம் அவர்களினால் இவ்விதழ் முதன்முதலில் வெளியிடப்பட்டது. இவ்விதழ் இந்து சமய தத்துவம், தமிழ் இலக்கியம், தமிழ் கலைகள், சாசனங்கள், இலக்கிய விமர்சனம், சமூகவியில், மானிடவியல் ஆய்வுகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ள ஆய்வு இதழாகும். 1991 - 2010 ஆம் ஆண்டு வரை 39 இதழ்கள் வெளிவந்துள்ளன.

கோபுரம்

எமது திணைக்களச் செயற்பாட்டு தகவல்களை தாங்கி வெளிவரும் காலாண்டிதழ் சஞ்சிகையாகும். 1980ஆம் ஆண்டு முதலாவது மலர் வெளியிடப்பட்டது. இது வரை 19 கோபுரம் மலர்கள் வெளிவந்துள்ளன. 1980 - 1986ஆம் ஆண்டு வரை தென்புலோலியுர் மு. கணபதிப்பிள்ளை அவர்கள் கோபுர இதழின் ஆசிரியராக இருந்தார். 1989 ஆம் ஆண்டு திரு. குமார் வடிவேல், உதவிப் பணிப்பாளர் கோபுர இதழின் ஆசிரியராக இருந்தார். 1990 - 2007ஆம் ஆண்டுகள் வரை திரு. ம. சண்முகநாதன். உதவிப் பணிப்பாளர் கோபுர இதழின் ஆசிரியராக இருந்தார். 2007 - 2008 ஆம் ஆண்டு வரை திரு. எஸ். தெய்வநாயகம்ஈ உதவிப் பணிப்பாளர் இதழின் ஆசிரியராக இருந்தார். 2008 ஆம் ஆண்டிலிருந்து திருமதி தேவகுமாரி ஹரன், சிரேஷ்ட ஆராய்ச்சி அலுவலர் இதழின் ஆசிரியராக இருந்துவருகின்றார்.

பஞ்சாங்கம்

கடந்த 19 ஆண்டுகளாக சித்திரைப் புதுவருடப் பஞ்சாங்கம் திணைக்களத்தினால் இலவசமாக வெளியிடப்பட்டு வருகின்றது. 2010 ஆம் ஆண்டு வரை பஞ்சாங்கப்பணியினை திரு.எஸ்.தெய்வநாயகம், உதவிப் பணிப்பாளர் அவர்கள் மேற்கொண்டு வந்தார். 2009 ஆம் ஆண்டு திரு. ஜெகதீஸ்வர சர்மா அவர்கள் பஞ்சாங்கத்தினை தயாரித்துள்ளார்.

அறநெறிப் பாடசாலை புத்தகங்கள்

அறநெறி மாணவர்களுக்கான பாடத்திட்டம், பாடத்திட்டத்திற்கு அமைவான பாடநால்கள் வருடந்தோறும் அச்சிடப்பட்டு நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுகின்றன.

 • சைவ சமய வரலாறு
 • சமய ஞானிகளும் பெரியார்களும்
 • பன்னிரு திருமுறைகள்
 • வேதங்களும் ஆகமங்களும்
 • அறநெறி இறுதிநிலைப் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களும் விடைகளும்
 • தர்மாசிரியர் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களும் விடைகளும்
 • சைவபோதினி பிரிவு ரீதியாக - பாலர், கீழ், மத்தி, மேல்
 • ஔவையார் அறிவு செல்வம்
 • பன்னிரு மாத நினைவுகள்
இந்து கலைக்களஞ்சியம்

இந்து சமயத்தவர்களுக்கு இந்துசமயம், இந்துசமய வரலாறு, தத்துவம், பண்பாடு, இந்துசமயப் பெரியார்கள். நூல்கள், தலங்கள், விரதங்கள் தொடர்பான பல விளக்கங்களைத் தரும் நூலாக இது அமைகின்றது. இத்திட்டம் 1989ஆம் ஆண்டு இச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை பத்துத் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் சில தொகுதிகளே கையிருப்பில் உள்ளன.

இந்துக் கலைக்களஞ்சியம் தொகுதி ஆண்டு கட்டுறை என்னிக்கை எழுத்துக்கள்
I 1990 670 'அ - ஈ'
II 1992 400 'உ - ஒள'
III 1996 149 'க'
IV 1998 172 'கா - கௌ'
V 2000 111 'ச - சா'
VI 2003 111 'சி - சௌ'
VII 2005 205 'ஞா - தி'
VIII 2006 160 'தி - தோ'
IX 2007 130 'ந - நௌ'
X 2009 150 'ப - பௌ'
நூற்கொள்வனவு

இலங்கை எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக இந்து சமயம், தமிழ் இலக்கியம் சம்பந்தான நூல்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன. கொள்வனவு செய்யப்படும் நூல்கள் நூலகங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. ஒரு நூல் 20 வீதம் கழிவுடன் திணைக்களத்தினால் கொள்வனவு செய்யப்படும். முதன் முதலாக வெளியிடப்படும் போது மட்டுமே ஒரு நூல் கொள்வனவு செய்யப்படும். பரீட்சைக்காக எழுதப்படும் நூல்களும், பாடநூல்களும், பருவகால சஞ்சிகைகளும் கொள்வனவு திட்டத்திற்குள் அடங்காதவை. சிறுவர் நூலாக இருப்பின் ஆகக் குறைந்தது 16 பக்கங்களைக் கொண்டதாகவும், ஏனைய நூல்கள் ஆகக் குறைந்தது 49 பக்கங்களைக் கொண்டதாகவும் இருத்தல் அவசியம். ஒரு ஆண்டில் ஒரு எழுத்தாளரின் இரண்டு வெளியீடுகள் மாத்திரமே கொள்வனவுக்குரியவை. எனினும் ஏனைய எழுத்தாளர்களின் கோரிக்கைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஒரு நூல் மட்டுமே கொள்வனவு செய்யப்படும். நூல் மதிப்பீட்டுத் திட்டக் குழுவின் சிபாரிசுக்கமைய ஒரு நூலைக் கொள்வனவு செய்தல் அல்லது நிராகரித்தல் முழுமையாகத் திணைக்களத் தீர்மானத்திற்குரியதாகும்.

அந்தணரல்லாத இந்துப் பூசகர்களுக்கான பயிற்சி

இந்து ஆலயங்களிற் பணிபுரியும் அந்தணர் அல்லாத இந்துப் பூசகர்களுக்கென வருடந்தோறும் இரண்டு வார கால வதிவிடப் பயிற்சிநெறி எமது திணைக்களத்தின் மூலம் வழங்கப்படுகின்றது. இத்துறையில் நிபுணத்துவம் மிக்க தமிழக அறிஞர்கள் இப்பயிற்சியினை வழங்குகின்றனர். ஆலய கிரியைகள் தொடர்பான அடிப்படை அம்சங்கள் இப்பயிற்சி நெறியின்போது கற்பிக்கப்படுகின்றன.

இந்து இளைஞர்களுக்கான ஆன்மீகப் பயிற்சிநெறி

இந்நிகழ்வானது 5 முதல் 7 நாள்கள் வரையான ஒருவதிவிடப்பயிற்சியாக வருடாந்தம் பல மாவட்டங்களில் நடாத்தப்பட்டு வருகின்றது. சமய உணர்ச்சி மிக்க ஒழுக்கம் நிறைந்த இளைஞர் சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்படும் இப்பயிற்சிநெறியானது “இந்து சேவாசங்கம்” (ஒரு சமயத் தொண்டு நிறுவனம்) உடன் இணைந்து நடாத்தப்படுகின்றது.

கண்காட்சி - தேசத்திற்கு மகுடம்

தேசத்திற்கு மகுடம் எனும் இணைந்த அபிவிருத்தித் திட்டத்திற்கு கீழ் இக்கண்காட்சியானது மிகப்பாரிய அளவில் வருடாந்தம் பெப்ரவரி 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்ட்டு நடாத்தப்பட்டு வருகின்றது. எமது அமைச்சிற்கு ஒதுக்கப்படும் இடத்திற்குள் எமது திணைக்களமும் பங்குபற்றி வருகிறது. துணைக்களச் செயற்பாடுகள், இந்து சமய நிகழ்வுகள் போன்றவற்றை சித்தரிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்படுவதுடன், திணைக்கள வெளியீட்டு நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

புண்ணிய கிராம எழிச்சித்திட்டம்

மகிந்த சிந்தனை கருத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கிராமங்களில் “புண்ணிய கிராம எழிச்சித்திட்டம்“ கிராமங்களின் முன்னேற்றம், மக்கள் மத்தியில் ஒழுக்க மேம்பாட்டை வளர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நந்திக் கொடிகள்

நந்திக்கொடி இந்துசமய சின்னமாகக் கருதப்படுவது. திணைக்களம் நந்திக் கொடிகளை அச்சிட்டு ஆலயங்களுக்கு இலவசமாக விநியோகித்து வருகின்றது. பெரிய கொடிகள் ஆலயங்களில் கொடியேற்றுவதற்காகவும், சிறிய கொடிகள் அலங்காரங்களைச் செய்வதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆலய உற்சவங்களைக் குறிப்பிடும் விஞ்ஞாபனங்களையும், கோரிக்கைக் கடிதங்களையும் சமர்ப்பித்து ஆலயத்தினர் திணைக்களத்தில் இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.

அறநெறி பாடசாலை புத்தககங்கள்

அறநெறி பாடசாலையிலுள்ள மாணவர்களில் எண்ணிக்கைக்கு ஏற்ப அறநெறி பாடசாலைகளை மேம்படுத்தும் நோக்கில் பல புத்தகங்கள் அச்சிடப்படும் கோள்வனவு செய்யப்பட்டும் வழங்கப்படுகின்றது.

சீருடை

மாணவர்களுக்கான சீருடை ஆண், பெண் இரு பாலாருக்கும் வேறு வேறாக பிரிவு ரீதியாக வழங்கப்படுகிறது. நிதி ஒதுக்கீட்டுக்கு அமைவாக கொள்வனவு செய்யப்பட்டு நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்டு சிறப்பாக இயங்கி வரும் பாடசாலைகளுக்கு வழங்கப்படுகிறது.

ஆசிரியைகளுக்கு சாறியும், ஆசிரியர்களுக்கு வேட்டியும் மேற் சட்டைக்கான துணியும் வழங்கப்படுகிறது.

இசைக்கருவிகள்

தாளம், சுருதி பெட்டி என்பன அறநெறிப் பாடசாலைகளுக்கு வழங்கப்படுகிறது.

நிர்வாகப் பதிவேடுகள்

பின்வரும் நிர்வாகப் பதிவேடுகள் ஒவ்வொரு அறநெறிப் பாடசாலைகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

தினவரவு பதிவேடு

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான வரப்பதிவேடு அச்சிடப்பட்டு இலவசமாக விநியொகிக்கப்படுகிறது.

பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு

அறநெறிப் பாடசாலைப் பொறுப்பாசிரியர்களுக்கு திணைக்களத்தால் வடிவமைக்கப்பட்டு மாணவர்களை வழிப்படுத்துவதற்காக இலவசமாக வழங்கப்படுகிறது.

பொருட் பதிவேடு

அறநெறிப் பாடசாலையிலள்ள பொருட்களை பதிவு செய்து பேணுவதற்காக வழங்கப்படுகிறது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2022 00:50 )